Introducing Samaganapriyan Perigai kulzhu
சாமகானப்பிரியன் பேரிகைக்குழு
சிவபரம்பொருளை முழுமுதற் கடவுளாகக் கொண்டு அமையும் சமயம் சைவ சமயம் ஆகும்.
நன்கொடை வழங்கவாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே
போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே
- சிவஞானசித்தியார், பிரமாணவியல், இரண்டாம் சூத்திரம்
சிவபரம்பொருளை முழுமுதற் கடவுளாகக் கொண்டு அமையும் சமயம் சைவ சமயம் ஆகும். இச்சைவ சமயம் உலகின் தொன்மையான சமயங்களுள் முதன்மையானது. இந்தியத்திருநாட்டின் மக்கள் பலராலும் பின்பற்றப்பட்டுவரும் சமயமாகும். தென்னாடாகிய தமிழ் நாட்டில் சிறந்து விளங்கிவரும் சமயமாகும்.
பதி (இறைவன்), பசு (ஆன்மாக்களாகிய உயிர்கள்), பாசம் (ஆன்மாக்களாகிய உயிர்களையும் இறைவனையும் பிரித்திருக்கும் தளையாகிய ஆணவம், கன்மம், மாயம் எனும் மூன்று கட்டுகள்) என்னும் முப்பொருள் கொள்கையைக் கொண்டு காரணகாரிய முறைப்படி உண்மைகளை விளக்கும் சமயம்.
பலதரப்பட்ட சமயங்கள் முன்வைக்கும் கருத்துகளில் காணலாகும் பிழைகளை எல்லாம் தருக்க முறைப்படி மறுத்து முடிவான உண்மையினை நிலைநாட்டிய சமயம். அனைத்து உயிர்களுக்கும் முத்தியாகிய சிவானந்தத்தை அனுபவிக்கும் உரிமை உண்டும் என்றும் அதனை அடையும் வழிகளைக் காட்டி உயிர்களை நல்வழிப்படுத்தும் சமயம். குரு வழிபாடு, இலிங்க வழிபாடு, சங்கம வழிபாடு என்னும் முத்திறப்பட்ட வழிபாட்டு முறைகளை உலகிற்கு வழங்கிய பெருமை உடையது.
இந்தியத் திருநாட்டின் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை பரவியிருக்கும் சைவ சமயம் ஒவ்வொரு பகுதியிலும் சிற்சில மாற்றங்களுடன் நடைமுறையில் உள்ளது. தென்னாடாகிய தமிழ்நாட்டில்தான் சைவ சமயம் சைவ சித்தாந்தம் என்னும் மெய்யியல் பிரிவாக ஓங்கி வளர்ந்தது. தமிழ்நாட்டின் மிகப்பழங்காலம்தொட்டே சைவ சமயம் நிலைத்திருந்தது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. நீள் நிமிர் சடை முது முதல்வன் என்றும் நீலமணி மிடற்று ஒருவன் என்றும் பிறவா யாக்கை பெரியோன் என்றும் கறைமிடற்று அண்ணல் என்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் புகழப்பட்டுள்ளார். திருக்குறளில் சைவ சமயக் கருத்துகள் நிரம்பிக் காணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து நால்வர் பெருமக்களது காலத்திலும் அதற்குப் பின்பும் சைவ சமயம் தமிழ் நாட்டில் ஓங்கிவளர்ந்தது.
ரிக் வேதம், யஜூர் வேதம், அதர்வண வேதம், சாம வேதம் ஆகிய நால்வேதமும், சிக்ஷை , வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் என்னும் ஆறங்கங்களும் 28 சிவாகமங்களும் 204 உபாகமங்களும் சிவப்பரம்பொருளால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டவை.
பல்கரந்தைச் சடையவன் சாமவேதன் என்னும் திருமுறைத் தொடருக்கு இணங்க சாம வேதம் பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. இதன்காரணமாகவே இறைவனுக்கு சாமகானப் பிரியன் என்றொரு திருநாமம் உள்ளது. இத்திருக்கூட்டத்திற்கு ஏழிசையாய் இசைப்பயனாய் இருக்கும் இறைவனுக்கு விருப்பமான இசையுடன் தொடர்புடைய சாமகானப் பிரியன் பேரிகைக்குழு என்று இறைவனது பெயரை முன்னிலைப்படித்திப் பெயர் சூட்டப்பட்டது. தற்பொழுது இத்திருக்கூட்டம் திருக்கயிலாய வத்தியம் இசைத்தலோடு மேலும் சில சிவ புண்ணியப் பணிகளில் ஈடுபட்டுவருவதால் சாமகான பிரியன் பேரிகைக்குழு அறக்கட்டளை என அமைந்துள்ளது.
சிவபெருமானின் பெருமையையும் தனித்தன்மையையும் உணர்த்தும் திருக்கயிலாய இசைக்கருவிகள்